தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், குறிப்பிடும்படியான ஒரு போக்கு பொது பத்திரிக்கைகள் என்று அறியப்படும் ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டது. அது 'திராவிட அரசியலின் வீழ்ச்சியா?',
‘மாற்றத்தை விரும்புகிறார்களா மக்கள்?' என்று தொடர் விவாதங்களை அரங்கேற்றி தலைவர்களில்லாமல் தமிழகம் தவிப்பதை போன்றதொரு பிம்பத்தை உருவாக்கி தனக்குத் தானே தீனிபோட்டுக்கொண்டிருந்தாலும், தமிழகத்தை வழிநடத்தக்கூடிய அடுத்தடுத்த தலைவர்களுக்கு இங்கே எந்த பஞ்சமும் உருவாகிவிடவில்லை என்பதே நிஜம்.
ரஜினி, கமல் என்று அடுத்தடுத்தவர்களின் வருகையால் 8 % லிருந்து 10 % வாக்குகளை பெறுவார்கள் என்பதும் கற்பனையே. கடந்த இரண்டாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் மொத்தமாய் சேர்ந்து கூட்டணி வைத்தாலும் திமுக அதிமுகவிற்கு இருக்கும் நிரந்தரமான வாக்கு வங்கியில் பாதியை கூட பெற முடியாது என்பதே கள நிலவரமாய் இருக்க முடியும். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 2016 தேர்தலின் வாக்கு சதவிகித வித்தியாசம் வெறும் 1.1 % என்கிற அசுர பலத்தோடு இருக்கும் போது, இயல்பாகவே அடுத்த தேர்தலில் திமுக வருவதற்கான வாய்ப்பிருக்கிறது.
வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்யப்போகும் இந்த குறைந்தபட்ச வாக்கு வங்கியை சிதறடிப்பதற்கான வேலையும் அரசியலென்னும் சதுரங்க விளையாட்டில் ஸ்டாலின் சந்தித்து தான் ஆக வேண்டும். திமுக என்னும் இயக்கம் தொண்டர்களின் களப்பணியால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்மென்பதை எதிரணியில் இருப்பவரும் கூட ஒப்புக்கொள்ளும் உண்மை. வெள்ளாவியில் வெளுத் தாலும் கரை போகாத அந்த பழைய கரை வேட்டியை பெருமையாய் உடுத்தி கம்பீரமாய் உலாவந்த திமுக காரர்கள், வெளுத்த வெண்ணிற உடையின் சட்டைப்பையில் கலைஞர், ஸ்டாலின் புகைப்படங்களை பளிச்சென தெரியும் வண்ணமாய் உலாவரும் விளம்பரக்காரர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
விளிம்பில் இருக்கும் அந்த கடைசி தொண்டனிடம் உற்சாகம் குறைந்து காணப்படுகிறது. ஒருவேளை எதிர்மறையான முடிவுகளை சந்திக்க நேர்ந்தால் அவர்களிடையே அது பெரும் சோர்வை உருவாக்கும். ஆட்சி அதிகாரத்தின் சுவையை ருசித்திடாத அந்த கடைசி தொண்டனிடம் இருக்கும் இந்த ஆதங்கமும் எண்ணமும் செயல்பாடுகளும் திமுகவை சுய வளர்ச்சிக்காக பயன்படுத்தி ஓரம் நின்று வேடிக்கை பார்ப்பவர்களிடத்தில் இல்லை, இருப்பதை காப்பாற்றிக் கொள்ள எஞ்சிய அதிகாரமே போதுமென்கிற முன்முடிவுக்கு வந்து விட்டார்களோ என்கிற சந்தேகமெழுவதை தடுக்க முடிவதில்லை.
இந்துத்துவத்தையும், இந்துத்துவ வாதிகளையும் விமர்சித்தால் அது பெரும்பான்மை இந்து மக்களை விமர்சிப்பதை போன்றதாகும் என பாஜகவினரால் திட்டமிட்டு பரப்பப்படும் வடிகட்டிய பொய்யூற்றில் அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் தன்னை தற்காலிமாக தள்ளிக்கொண்டதாய் சமாதானப்பட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை அப்படியான சமரசங்களுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லையென பெரியாரின் வழிவந்த கலைஞர் நின்று நிதானமாய் ஆடி நிரூபித்த களம் அது. எதிரணியின் கூட்டணி குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. பல்முனை போட்டிகளால் உருவாகப்போகும் வாக்குப்பிளவுகளால், சிறிய அளவிலான வாக்குகள் கூட கடந்த தேர்தலை போல வெற்றியை நிர்ணயிக்கும் சதவிகிதமாக இருக்கலாம். இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஓரளவு அதிகாரப் பகிர்வை கொடுப்பதற்கு திமுக ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், முழு வீச்சில் மொத்தக் கூட்டணி இயக்கத்தாரும் உத்வேகத்தோடு தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கலாம். தோழமை கட்சிகளேயானாலும் அரசியல் செய்யவே இங்கு இருக்கிறார்கள், பரஸ்பர முறையில் மட்டுமே இணைந்திருப்பது அரசியலில் சாத்தியமற்றதாக அவர்கள் நினைக்கக்கூடும். இதை முன்னெடுப்பதும் வழி நடத்துவதும் தக்க வைப்பதும் திமுகவின் பொறுப்பு.
மார்ச், 2018.